ஞாயிறு கொண்டாட்டம்

மரி என்கிற  ஆட்டுக்குட்டி!

ஒரு மாணவியை பள்ளியில் இருந்து வெளியேற்றுவதற்கான கூட்டம் அது! தலைமை ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் கேட்கிறார்.

சா. ஜெயப்பிரகாஷ்

ஒரு மாணவியை பள்ளியில் இருந்து வெளியேற்றுவதற்கான கூட்டம் அது! தலைமை ஆசிரியர் ஒவ்வொருவரிடமும் கேட்கிறார்.
 ""அந்த அற்புத மரிக்கு டிசி கொடுத்து அனுப்பிவிடலாம்னு யோசிக்கிறேன் சார்'' என்கிறார் தமிழ் ஆசிரியரை நோக்கி.
 ""எந்த அற்புதமரி?'' எனத் தமிழாசிரியர் கேட்க, ""அதான் சார் எப்போ பார்த்தாலும் சூயிங்கம் மென்று கொண்டே, எல்லோரையும் அலட்சியப்படுத்தும் வகையில் திமிராகவே போற 10ஆம் வகுப்புப் பொண்ணு'' என எல்லா ஆசிரியர்களும் பரிந்துரைக்கிறார்கள்.
 ""போன ஆறு மாசத்துல எண்ணிப் பன்னிரண்டே நாள்கள்தான் பள்ளிக்கூடத்துக்கு வந்திருக்கா'' என தனது முடிவுக்கு ஆவணங்களையும் சேர்த்து வைக்கிறார் தலைமை ஆசிரியர்.
 ""ஏதாவது மெடிக்கல் சர்ட்டிபிகேட் வாங்கியாவது பரீட்சை எழுத வைத்திடலாமே'' எனக் கேட்கிறார்
 தமிழாசிரியர்.
 வரலாற்று ஆசிரியரிடமும், உடற்கல்வி ஆசிரியரிடமும் அற்புதமரி எடுத்தெறிந்து பேசியதை தலைமை ஆசிரியர் விவரிக்கிறார்.
 ""இப்போ டிசி கொடுத்துட்டா எஸ்எஸ்எல்சி எழுத முடியாமப் போய்விடுமே, வாழ்க்கை வீணாகிப் போய்விடுமே?'' என மீண்டும் கேட்கிறார்
 தமிழாசிரியர்.
 ""அந்தக் கழுதைக்கே அந்தக் கவலை இல்லாதபோது நமக்கென்ன சார் கவலை?'' என்கின்றனர்.
 வீட்டுக்குச் சென்றபோதும் தமிழாசிரியருக்கு மரியின்மீது ஆசிரியர்கள் சுமத்திய குற்றச்சாட்டுகளே ஓடிக் கொண்டிருக்கின்றன. மனைவியிடமும் பேசுகிறார். மாலையில் கடற்கரைக்குப் போகும்போது மரியோட வீட்டுக்குப் போகலாம் என முடிவு சொல்கிறார் தமிழாசிரியர்.
 தமிழாசிரியரையும், அவரது மனைவியையும் கண்டதும் இரட்டை ஆச்சரியத்துடன் வரவேற்கிறாள் மரி.
 பேசிக் கொண்டே இருக்கும்போதுதான் மரி சொல்கிறாள்:
 ""வீடா சார் இது, அப்பா எப்பவோ எங்களை விட்டுட்டுப் போயிட்டார். அம்மா என்னை சுத்தமா விட்டுடல. வேறொருத்தரோட இருக்காங்க. அவ்வப்போது வந்து பார்த்துட்டுப் போறாங்க. ஏதோ லாட்ஜ் மாதிரி தோணுது'' என்கிறாள் மரி.
 ""பள்ளிக்கூடத்துக்கு வந்தா ஒரு மாறுதலா இருக்குமில்லையா?'' எனத் தமிழாசிரியர் கேட்க, ""யாருக்காக சார் நான் படிக்கணும்?'' என்கிறாள் மரி.
 ""உனக்காகத்தான்'' எனத் தமிழாசிரியர் சொன்னபோது, சட்டென்று வந்துவிழுகிறது ""ப்ச்'' என்ற அலட்சியம்.
 சற்றுநேர அமைதிக்குப் பிறகு, ""கடற்கரைக்குப் போகலாமே?'' எனக் கேட்டவுடன், மரியின் முகத்தில் ஆச்சரியம் பிரகாசிக்கிறது.
 கடற்கரைக்குச் சென்றுவிட்டு, மரியை தங்களது வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர். வீட்டில் சாப்பிடச் சொல்கிறார்கள். ரசித்துச் சாப்பிட்டாள் மரி.
 தொடர்ந்து அடிக்கடி தமிழாசிரியர் வீட்டுக்கு வந்து போகும் நிலையும் வந்தது. அவருடைய மனைவிக்கு வேலையில் உதவி செய்துதரும் அளவுக்கு நெருக்கம் வந்துவிடுகிறது.
 நாடகத்தின் கிளைமாக்ஸ் காட்சி. தமிழாசிரியரிடம் மரி கேட்கிறாள்:
 ""நான் ஏன் பள்ளிக்கூடத்துக்கு வரலைன்னு நீங்க ஏன் கேட்கலை சார்? ஏன் வரலைன்னு அறைவிட்டுக் கேட்டிருக்கணும் சார் நீங்க. அப்படி யாரும் கேட்கலைங்கிறதாலதான் நானும் இப்படி விட்டேத்தியாக இருக்கேன். அன்பு செலுத்துகிறவர்களுக்குத்தான் அதட்டிக் கேட்கவும் அதிகாரம் இருக்கு சார்'' கண்களில் கண்ணீர் தாரை
 தாரையாக.
 ""உனக்கே அது தோன்ற வேண்டும் என்றுதான் காத்திருந்தேன். இன்னைக்குப் புதுசா ஆரம்பிப்போம், இப்போதிருந்தே படி, நாளைக்கு பள்ளிக்கூடத்துக்குப் போகலாம் சரியா?'' எனச் சொல்லி தேற்றுகிறார் தமிழாசிரியர்.
 மரி முகத்தை மூடிக் கொண்டு விசும்பி விசும்பி அழ, பின்னணியில் "நல்லதோர் வீணை செய்தே...' என்ற பாரதியின் பாடல். முழுப்பாடலும் நிறைவுபெறும்போது, மரியுடன் ஒவ்வொரு ஆசிரியரும் வந்து சேருகின்றனர். முடிவுக்கு வருகிறது நாடகம், கனத்த மனத்துடன்.
 திருச்சி எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் நடித்த நாடகம் இது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. எழுத்தாளர் பிரபஞ்சனின் "மரி என்கிற ஆட்டுக்குட்டி' என்ற சிறுகதையை நாடகப் பனுவலாக மாற்றியவர் நாடகாசிரியர் பேராசிரியர் கி. பார்த்திபராஜா.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

SCROLL FOR NEXT